சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்ததால் போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்


சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்ததால் போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2023 4:15 AM IST (Updated: 25 Sept 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்ததால் போலீஸ் நிலையம் முன்பு ஒரு தரப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்த ஒருதரப்பினர், குள்ளப்புரத்தில் நடந்த காதணி விழாவுக்காக சீர்வரிசை பொருட்களை கொண்டு சென்றனர். காதணி விழா நடந்த தெருவுக்குள் அவர்கள் சென்றபோது, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வழிமறித்து தடுத்தனர். இதையடுத்து அவர்கள் மாற்றுப்பாதையில் காதணி விழா நடந்த வீட்டிற்கு சென்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், நேற்று ஜெயமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குள்ளப்புரத்தை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சீர்வரிசை கொண்டு சென்றதை தடுத்த குள்ளப்புரத்தை சேர்ந்த 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஜெயமங்கலத்தை சேர்ந்த தரப்பினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில், ஜெயமங்கலத்தை சேர்ந்த தரப்பினர் 36 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story