வேப்பந்தட்டை தாலுகா அலுவலகம் முன்பு நூதன போராட்டம்
மயானத்திற்கு பாலம் கட்டித்தர வேண்டி வேப்பந்தட்டை தாலுகா அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை ஊராட்சி அய்யர்பாளையத்தில் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள வக்னாபாடி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். அப்போது வெங்கலம் வருவாய் ஆய்வாளர் போராட்டம் நடத்தியவர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவமதித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அய்யர்பாளையம் கிராம பொதுமக்கள் இணைந்து வேப்பந்தட்டை தாலுகா அலுவலகம் முன்பு பாடையுடன் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் சங்கு ஊதி பாடையுடன் ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகம் சென்றடைந்தனர். அங்கு நுழைவு வாயில் முன்பு பாடையை வைத்து மயானத்திற்கு செல்லும் சாலையில் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி தர வேண்டும் என நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்களை அவமதித்த வருவாய் ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.