சோழவந்தான் அருகே குடிநீர், பஸ் வசதி கேட்டு மறியல்
சோழவந்தான் அருகே குடிநீர், பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே குடிநீர், பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழாய் பதிப்பு
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் வழியாக மதுரை மாநகராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் குழாய் பதித்து வருகின்றனர். இதனால் சாலை ஓரங்களில் சுமார் 6 அடி முதல் 8 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் வேலை நடந்து வருகிறது. ஒரு மாத காலமாக பணிகள் மெயின் ரோட்டில் நடந்து வருவதால் தற்போது திண்டுக்கல், நிலக்கோட்டை உள்பட வட பகுதியில் இருந்து திருமங்கலம் வழியாக தென்பகுதிக்கு செல்லக்கூடிய லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது.
தற்போது 10 நாட்களாக மோட்டார் சைக்கிள்களும் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள் மற்றும் வெளியூரில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் பஸ் வசதி இல்லாமல் 3 கிலோமீட்டர் நடந்து செல்லக்கூடிய அவல நிலை உள்ளது. நடந்து வரும்போது பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பெண்களும், மாணவிகளும் தெரிவித்தனர்.
சாலை மறியல்
மேலும் ஊராட்சிக்கு குடிநீர் எடுத்து செல்லக்கூடிய குழாயும் சேதமடைந்துள்ளது. இதுவரை குடிநீர் குழாயை சரிசெய்து தரவில்லை. இதனால் ஒரு வார காலமாக குடிநீர் பிரச்சினை நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் சாலை பணி நடக்கக்கூடிய இடத்திற்கு காலிக்குடங்களுடன் வந்தனர்.
பின்னர் அவர்கள் பஸ் வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீர் செய்ய வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அடிப்படை வசதிகள்
இதுகுறித்து கிராம பள்ளி மேலாண்மைகுழுவை சேர்ந்த ரேணுகாதேவி கூறியதாவது:- இந்த கிராமத்தில் ஒரு மாதமாக மாநகராட்சி குடிநீர் குழாய் பதித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பணியின்போது எங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயும் உடைந்துள்ளது. இதனால் குடிநீர் இன்றி ஒரு வாரமாக தவித்து வருகிறோம். மேலும் மின்சார வசதி துண்டிக்கப்பட்டு பல இடங்களில் மின் வசதி இல்லாமல் அவதிப்படுகிறோம். எனவே, குடிநீர் மற்றும் பஸ் வசதி உள்பட அடிப்படை வசதிகள் உடனே கிடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த மறியலால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.