சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்


சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
x

சோழங்குறிச்சியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சோழங்குறிச்சி செல்லும் பாதை உள்ளது. இந்த வழியாகத்தான் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் செல்வது வழக்கம். இந்தநிலையில் இந்த சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பாதைக்கு சுரங்கப்பாதை அமைக்காமல் பைபாஸ் சாலைக்கும், சோழங்குறிச்சி இணைப்பு சாலையையும் இணைக்கும் வகையில் மண்களை போட்டு மேடாக்கி பாதையை செப்பனிட அதிகாரிகள் முயன்றனர்.

சாலை மறியல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் சோழங்குறிச்சியில் சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார், ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story