முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோவை சிறையை முற்றுகையிடும் போராட்டம்
முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோவை சிறையை முற்றுகையிடும் போராட்டம்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. உள்பட திரளானவர்கள் பங்கேற்பு.
கோவை,
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோவை சிறை முன்பு முற்றுகையிடும் போராட்டத்தை த.மு.மு.க. அறிவித்து இருந்தது. இந்த போராட்டம் நேற்று மாலை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள சிறை ரோட்டில் நடைபெற்றது.
த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சிறை முற்றுகை போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வேன் மற்றும் பஸ்களில் வந்து கலந்துகொண்டனர். ஏராளமானவர்கள் கூடியதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.