மீன்பிடி துறைமுகத்தை திறக்கக்கோரி 6-ந் தேதி முதல் போராட்டம்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை திறக்கக்கோரி வருகிற 6-ந் தேதி முதல் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மேலாண்மை குழு கூட்டத்தில் மீனவர்கள் அறிவித்தனர்.
புதுக்கடை:
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை திறக்கக்கோரி வருகிற 6-ந் தேதி முதல் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மேலாண்மை குழு கூட்டத்தில் மீனவர்கள் அறிவித்தனர்.
மேலாண்மை குழு கூட்டம்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு மீனவர்கள் பலியாகி வருகிறார்கள். இதனால், துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மீன்பிடித்துறைமுக மேலாண்மை குழு கூட்டம் நேற்று மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாதபாண்டியன் தலைமையில் தேங்காப்பட்டணத்தில் நடந்தது. கூட்டத்தில் உதவி இயக்குனர் விர்ஜில் கிராஸ், மீன்வளத்துறை ஆய்வாளர் அக்ரி குமார், கடலோர காவல்படை குழும இன்ஸ்பெக்டர் அருள் ரோஸ் மற்றும் மேலாண்மை குழு நிர்வாகிகள், மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மீனவர்கள் பேசும் போது கூறியதாவது:-
மூடப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகத்தை திறந்து தொழில் ெசய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டம்
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 6-ந் தேதி முதல் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம். அதற்கு முன்னதாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புயல் தொடர்பான வானிலை எச்சரிக்கைகளை சரியான முறையில் அறிவிக்க வேண்டும். லட்சத்தீவு, மன்னார் வளைகுடாவால் வானிலை மாற்றங்கள் ஏற்பட்டாலும், எங்களை மீன்பிடிக்க விடாமல் தடுக்கிறார்கள். அதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசும் போது கூறியதாவது:-
துறைமுக முகத்துவாரத்தில் தேங்கியுள்ள மணல் திட்டுகளை அகற்ற வருகிற 6-ந் தேதி மணல் அள்ளும் எந்திரம் துறைமுகத்திற்கு வந்து விடும். தொடர்ந்து 20-ந் தேதிக்குள் முதல் கட்டமாக மண் அள்ளும் பணி மேற்கொள்ளப்படும்.
10 நாட்களில்...
தற்போது கல் குவாரிகள் இயங்குவது தொடர்பாக பல்வேறு சட்ட சிக்கல்கள் நிலவுவதால் அலைதடுப்பு சுவருக்காக கற்கள் போடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. வருகிற 10 நாட்களுக்குள் கற்கள் போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கலெக்டர் பரிசீலனை செய்து துறைமுகத்தை திறப்பது தொடர்பாக முடிவை அறிவிப்பார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே துறைமுகம் மூடப்பட்டுள்ளதால் சுமார் 9 விசைப்படகுகள் மீன்களுடன் முகத்துவாரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ரூ.1 கோடி மதிப்பிலான மீன்கள் உள்ளன. துறைமுகம் திறந்தவுடன் அந்த மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.