வீடு கட்டியவர்களுக்கு தடையின்மை சான்று வழங்கக் கோரி போராட்டம்
ஏமூர், உப்பிடமங்கலம் பகுதியில் அரசு வழங்கிய இடங்களில் வீடு கட்டியவர்களுக்கு தடையின்மை சான்று வழங்கக் கோரி போராட்டம் நடந்தது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம்
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏமூர், உப்பிடமங்கலம் பகுதியில் அரசு வழங்கிய இடங்களில் சிலர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு அதற்கு தடையின்மை சான்று மற்றும் கணினி பட்டா மாற்றம் செய்து வழங்க வேண்டும் எனக்கூறி கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியரிடம் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கரூர் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள தனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பட்டியலின விடுதலை பேரவையின் மாநில தலைவர் தலித் ஆனந்தராஜ் தலைமையில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.