சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து ெபாதுமக்கள் சாலை மறியல்
காவேரிப்பாக்கத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விபத்தில் பெண் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி மாங்காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி (வயது 55). இவர் வீட்டில் கணவருக்கு உதவியாக விவசாயத்துடன் பட்டுப்பூச்சி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை உமாமகேஸ்வரி கொண்டாபுரம் பகுதியில் உள்ள தங்களது விவசாய நிலத்திற்கு பசுமாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று கட்டிவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.
சாலை மறியல்
இந்த நிலையில் உமாமகேஸ்வரியின் உறவினர்கள் இன்று காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.
அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், புகார் கொடுக்க வந்தவர்களிடம் தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்ததாகவும், கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள, பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள், சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.