தகுதியான பயனாளிகளுக்கு சிரமமின்றி கடன் வழங்க வேண்டும் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

குமரி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு சிரமமின்றி கடன் வழங்க வேண்டும் என்று வங்கி மேலாளர்களுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகா்கோவில்,
குமரி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு சிரமமின்றி கடன் வழங்க வேண்டும் என்று வங்கி மேலாளர்களுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கலந்தாலோசனை கூட்டம்
குமரி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மகளிர் திட்டம் சார்பில் அனைத்து வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியபோது கூறியதாவது:-
தமிழக அரசு பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், புதிய தொழில் முனைவோர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு கடனுதவிகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்ட முன்னோடி வங்கிகள் மற்றும் அரசுத்துறைகளின் கீழ் கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில் வழங்கப்பட்ட கடனுதவி குறித்தும், அரசால் வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும் துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
சிரமமின்றி கடன்
குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தாட்கோ, மாவட்ட தொழில் மையம், காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம், காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் மூலமாக பயனாளிகளுக்கு வங்கி கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி அதிக கடனுதவிகள் வழங்க வேண்டும். மேலும் வேலையில்லா இளைஞர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கும், வேலைவாய்ப்பு வழங்குவதற்குமான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வங்கியாளர்கள், அரசு துறை அலுவலர்கள் தகுதியான பயனாளிகளுக்கு எந்தவொரு சிரமமின்றி கடனுதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் சத்ய நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






