அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த நிதி உதவி வாரி வழங்குங்கள் -முதல்-அமைச்சர் வேண்டுகோள்


அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த நிதி உதவி வாரி வழங்குங்கள் -முதல்-அமைச்சர் வேண்டுகோள்
x

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிக்கூடங்களை தரம் உயர்த்த ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். உலகத்தமிழர்களும், தொழில் அதிபர்களும் புதிய திட்டத்துக்கு நிதி உதவியை வாரித்தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

சென்னை,

அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதுபோல் அரசுப் பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நம்ம 'ஸ்கூல்' திட்டம்

சென்னையில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டார்.

பேராசிரியர் அன்பழகன் நினைவை போற்றும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்துக்கு 'அன்பழகன் கல்வி வளாகம்' என்று பெயர் சூட்டினார். நூற்றாண்டு நினைவு வளைவையும் திறந்து வைத்தார்.

அதுபோல் நேற்று கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ளஅரசுப் பள்ளிக்கூடங்களை அனைவரின் பங்களிப்புடன் தரம் உயர்த்துவதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

'நம்ம ஸ்கூல்' பவுண்டேஷன் தலைவராக தொழில் அதிபர் வேணுசீனிவாசன், தூதுவராக செஸ் விளையாட்டு வீரர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

'நம்ம ஸ்கூல்' நிதிக்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 லட்சத்தை வழங்கி, திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து பேசினார்.

"எல்லாவற்றையும் அரசாங்கம் செய்துவிட முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும். நம் பள்ளிக்கூடங்களை மேம்படுத்த உலகத்தமிழர்களும், தொழில் அதிபர்களும் வாரி, வாரி வழங்குங்கள். நாம் விரும்பும் கனவுப்பள்ளியை நாம் உருவாக்குவோம்" என்றார்.

மேலும் அவர் பேசியதாவது:-

கல்வியில் 2-ம் இடம்

ஒவ்வொருவருடைய வாழ்விலும் வசந்தகாலம் என்பது பள்ளிக்காலம்தான். நாம் இந்த அளவிற்கு உயர்வதற்கு, இந்த உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தது அந்த பள்ளிக்கூடம்தான். அந்த பள்ளிக்கூடங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டாமா? என்ற உன்னதமான நோக்கத்தோடு, 'நம்ம ஸ்கூல்' பவுண்டேசன், நம்ம ஊர் பள்ளி என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையுமே அரசாங்கம் செய்துவிட முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும். பயன்பெற்றவர்கள் தங்களது நன்றியின் அடையாளத்தை தெரிவிக்கலாம். அதற்கான வாசற்படிதான் நம்ம ஊர் பள்ளி திட்டம்.

தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-வது இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. முதல் இடத்திற்கு முந்துவதற்கான அனைத்து பணிகளையும் பள்ளி கல்வித்துறை சிறப்பாக செய்கிறது. அந்த வரிசையில், நம் பள்ளி - நம் பெருமை என்ற திட்டத்தை இங்கே தொடங்கிவைத்திருக்கிறேன்.

பள்ளிப்பிள்ளைகள் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் மனநிறைவோடு கற்கக்கூடிய சூழலை திராவிட மாடல் ஆட்சி உருவாக்கி தந்துகொண்டு இருக்கிறது. கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த அறிவுச்சொத்தை உருவாக்கி தந்து வருகிறோம். அரசு பள்ளிகள் என்பவை அரசின் சொத்துகள் மட்டுமல்ல, அது மக்களுடைய சொத்துகளுமாகும்.

வெளிப்படைத்தன்மை

இதை மனதில் வைத்துதான் பள்ளி மேலாண்மை குழுக்களை அமைத்தோம். 37 ஆயிரத்து 558 பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அவை மூலம் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஊராட்சிகள் மற்றும் சமூகத்தின் நலம்விரும்பிகள் அனைவரும் ஒரு கட்டமைப்பாக, நிறுவனமாக ஒன்றிணைந்தனர். தங்கள் பள்ளிக்கு எது தேவையோ அதனை அவர்களே உருவாக்கி தர முன்வந்துள்ளார்கள்.

இந்த எண்ணங்களை அரசு மட்டுமே தனியாக செய்ய முடியாது. உங்கள் அனைவருடைய உதவியும், ஆதரவும் இதற்கு நிச்சயம் தேவை. இப்போதும் எப்போதும் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்க ஒன்றிணைய விரும்பக்கூடிய உங்கள் எல்லோருடனும் கைகோர்க்க அரசு விரும்புகிறது. உள்ளூர் மக்களுடன் முன்னாள் மாணவர்களுடன், தொழிற்துறையுடன், உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் கைகோர்ப்பதற்காகவும் நம்ம ஊர் பள்ளி திட்டம் அடித்தளம் அமைத்திருக்கிறது. நீங்கள் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய் நன்கொடையும்கூட கூடுதல் வெளிப்படைத்தன்மையுடனும், கடமையுணர்வுடனும், நம் பள்ளிகள், ஆசிரியர்கள், குழந்தைகளின் வளர்ச்சிக்கென செலவிடப்படும்.

பொறுப்புடன்...

இது அரசுக்கும், உங்களுக்குமான நீடித்த உறவாக இருக்கும் என்று நான் உறுதியோடு கூறுகிறேன். உங்களுடைய சமூக பொறுப்புணர்வு நிதி (சி.எஸ்.ஆர்.), பயனுள்ள முறையில் செலவிடப்படுவதை உறுதி செய்யுங்கள். எங்கள் தரப்பிலிருந்து உங்கள் பங்களிப்பை தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பொறுப்புடன் பயன்படுத்துவோம் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

நீங்கள் பயின்ற பள்ளிக்கும், உங்கள் ஊருக்குமான உறவை 'வெர்சுவல் பெவிலியன்' வழியாக புதுப்பிக்கும்படி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன். உங்களை வளர்த்த உங்கள் மண்ணுக்கு நீங்கள் செய்த, அதை நீங்கள் திருப்பி செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு நம்ம பள்ளி திட்டம் மூலமாக நமக்கு கிடைத்திருக்கிறது.

நம்முடைய குழந்தைகள் வளர்ந்து உங்கள் நிறுவனங்களையும், பெருநிறுவனங்களையும், தமிழ்நாட்டின் கிராமங்களையும், நகரங்களையும் முன்னேற்றுவார்கள். அவர்கள் நம் வளத்தையும், நம்பிக்கையையும், திட்டங்களையும் வளர்த்தெடுப்பார்கள். நம் அரசு பள்ளிகளை மேலும் வலுப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ள 'நம்ம ஸ்கூல்' பவுண்டேஷனுக்கு நிதி உதவி செய்து, பிறருக்கு எடுத்துக்காட்டாக ஆதரவளிக்க ஒவ்வொருவரும் முன்வருவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

வாரி, வாரி வழங்குங்கள்

அதற்கு தொடக்கமாக நானே முதல் நபராக எனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை இந்த திட்டத்திற்காக அளிக்கிறேன். அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள், வணிகர்கள், திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பரந்த உள்ளத்தோடு தன்னுடைய பங்களிப்பை வழங்குங்கள்.

உங்கள் ஒவ்வொரு ரூபாயும் அரசு பள்ளிகளுக்கே செலவிடப்படும். நம் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்காக வாரி, வாரி வழங்கி அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம், நாம் காண விரும்பிய கனவுப்பள்ளியை நாம் உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் லியோனி, பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

டி.வி.எஸ். குழும நிறுவனங்கள் தலைவரும், 'நம்ம ஸ்கூல்' பவுண்டேஷன் தலைவருமான வேணு சீனிவாசன் வரவேற்றார். நம்ம ஸ்கூல் பவுண்டேஷனின் தூதுவரும், செஸ் விளையாட்டு வீரருமான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சிறப்புரை ஆற்றினார். பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா நன்றி கூறினார்.


Next Story