மருத்துவ பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்


மருத்துவ பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்
x

மருத்துவ பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு:

மருத்துவ பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

கராத்தே பயிற்சி

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஈரோடு மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தற்போது அதிக எண்ணிக்கையில் பெண்கள் பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுகின்றனர். இதனை தடுக்க பெண்களுக்கு மன உறுதி தரும் தற்காப்பு பயிற்சி அவசியம் வழங்க வேண்டும். அந்த அடிப்படையில் அரசு பள்ளிக்கூடங்களில் கராத்தே பயிற்சி அளிக்க 3 மாதங்கள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் பள்ளிக்கூட மாணவிகள் முழுமையாக கராத்தே தற்காப்பு கலையை கற்க முடியவில்லை. அதனை 10 மாதங்களாக அதிகரித்தால் தற்காப்புக்கலை மாணவர்களிடம் முழுமையாக சென்றடையும். தற்போது மாதம் ரூ.3 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதனை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

ஊதிய உயர்வு

சுகாதார துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் "மக்களைத் தேடி மருத்துவம்" என்னும் திட்டத்தில் பணியாற்றும் பெண் மருத்துவ பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 170 பேர் பணியாற்றி வருகிறோம். பகுதிநேர பணி எனக்கூறினாலும் நாள்தோறும் 8 மணி நேரம் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாத சம்பளமாக ரூ.4 ஆயிரத்து 500 மட்டுமே வழங்கப்படுகிறது. தினமும் 30 புதிய நபர்களை சந்தித்து அவர்களது உடல் எடை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட முழு விவரங்களை பெற்று பி.எஸ்.ஆர். என்னும் செயலியின் மூலமாக பதிவு செய்யும் பணியை மேற்கொள்கிறோம். நாங்கள் பிற மருத்துவ பணியாளர்களை போலவே பணியாற்றி வருவதால் எங்களது ஊதியத்தை உயர்த்தி வழங்குவதுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

கரும்பு அறுவடை

காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதி காங்கயம்பாளையம், பஞ்சலிங்கபுரம் பகுதி விவசாயிகள் கொடுத்திருந்த மனுவில், 'வருகிற 16-ந் தேதி காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறந்தால் கரும்பு வயலில் மீண்டும் ஈரப்பதம் ஏற்பட்டு அறுவடை பணி கடுமையாக பாதிக்கும். எனவே 30 நாட்கள் தாமதமாக தண்ணீர் திறக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

வீட்டுமனை பட்டா

மொடக்குறிச்சி அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'எங்கள் பகுதியில் உள்ள 32 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியதை போல நாங்கள் குடியிருக்கும் பகுதியையும் நத்தமாக மாற்றி, எங்களுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில், 'ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை எடுத்ததில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்வதுடன், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கூறி இருந்தனர்.

213 மனுக்கள்

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மொத்தம் 213 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில், புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு உழைக்கும் திறனற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story