பொதுமக்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொதுமக்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அன்னவாசல் அரசு மருத்துவமனையின் அவல நிலையை களைந்து முழுமையான மருத்துவமனையாகவும், 24 மணி நேரமும் இயங்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜோஷி தலைமை தாங்கினார். அப்துல்கரீம், லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் போதிய பொது மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், தேவையான மருத்துவ கருவிகள் வழங்கிட வேண்டும். இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னவாசல் பேரூராட்சி மக்களுக்கு உண்டான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டி சாலை மறியல் அறிவித்தநிலையில் தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டத்தில் கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என கூறி இதுநாள்வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னவாசல் வாரச்சந்தை கடைகளுக்கு மின் விளக்கு வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.