ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தீர்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய சமரச தீர்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊட்டி
ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய சமரச தீர்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சமரச தீர்வு மையம்
தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின் படியும், நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி வழிகாட்டுதலின்படியும் நீலகிரி மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சமரச தீர்வு தின நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த புதிய கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நீதிபதி முருகன் தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்கள் மற்றும் வழக்கு தரப்பினர்கள் ஆகியோர்களுக்கு சமரசம் என்றால் என்ன, சமரசத்தின் பயன்கள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:-
பேச்சுவார்த்தை
சமரச வார விழா இன்று (நேற்று) முதல் தொடங்கப்பட்டு வருகிற நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை நீலகிரி மாவட்ட அனைத்து தாலுகா நீதிமன்றங்களிலும் நடைபெற இருக்கிறது. அதாவது, வழக்கு தரப்பினர்கள் தங்களுடைய முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி தீர்வு காண்பதே சமரசம் ஆகும். சமரசர் முன்னிலையில் அந்தந்த வழக்குதாரர்கள் பேச்சுவார்த்தையில் சமரசம் செய்துகொள்வது நிலுவையில் உள்ள வழக்குகளை நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர்கள் மூலமாகவோ சமரச மையத்திற்கு அனுப்பிவைத்து அதில் தீர்வு எட்டலாம். சமரசம் ஏற்படாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம். இங்கு தீர்வு கண்டால் நீதிமன்ற கட்டணம் முழுவதையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக சமரசம் மையத்தில் நடக்கும் பேச்சு வார்த்தைகள் குறித்து ரகசியம் காக்கப்படும். அதேபோல் சமரச தீர்வு மையத்தில் காணப்படும் தீர்ப்பு இறுதியானதாகும். இதற்கு மேல்முறையீடு கிடையாது. இதன் மூலம் இரு தரப்பும் பயன் அடையலாம். வழக்குகள் நிலுவையில் இருப்பது குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிகழ்ச்சியில் மகளிர் நீதிமன்ற நீதிபதி நாராயணன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், மாவட்ட நீதிமன்ற சார்பு நீதிபதி ஸ்ரீதர் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.