பொதுமக்கள் சாலைமறியல்


சேலம்

எடப்பாடி:-

சுற்றுலா பயணிகள் ஓய்வு விடுதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பூலாம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகள் ஓய்வு விடுதி

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கி செல்லும் வகையிலான ஓய்வு விடுதி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.2 கோடியே 10 லட்சத்தில் பணிகள் செய்ய தொடங்குவதற்கான முன்னேற்பாடு நடந்தது.

நேற்று சேலம் அருகே கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள், புதிய கட்டுமானங்கள் அமைய உள்ள பூலாம்பட்டி காவிரிக் கரை பகுதியில் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியினை தொடங்கினர்.

பொதுமக்கள் சாலைமறியல்

தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். அவர்கள், புதிய கட்டுமான பணிகள் தொடங்கினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி எடப்பாடி- மேட்டூர் பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த உள்ளாட்சி அலுவலர்கள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக அந்த பகுதியில் பணிகள் நடைபெறாது என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story