திருச்செந்தூரில் பொதுமக்கள் சாலைமறியல்
திருச்செந்தூரில் பாதாளச்சாக்கடை நிரம்பி மனித கழிவுகள் வெளியேறி, துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் பாதாளச்சாக்கடை நிரம்பி மனித கழிவுகள் வெளியேறி, துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையில் ஓடிய கழிவுகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நாழிகிணறு பஸ்நிலையம் பகுதியில் உள்ள இலவச கழிப்பறை, குடியிருப்பு வீடுகள் மற்றும் விடுதிகளில் உள்ள கழிவுநீர் பாதாளச்சாக்கடை இணைப்பில் சேர்கிறது. தற்போது தமிழ் மாதம் கார்த்திகை என்பதால் தினமும் கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் சாலைமறியல்
இந்நிலையில் நேற்று நாழிக்கிணறு பஸ்நிலையம் செல்லும் சாலையில் பழைய கோவில் போலீஸ் நிலையம் அருகில் பாதாளச்சாக்கடை இணைப்பு தொட்டி நிரம்பி, அதிலிருந்து ஏராளமான கழிவுநீர் மற்றும் மனித கழிவுகள் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் சாலையில் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து இந்த கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நாழிகிணறு பஸ்நிலையம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி தலைவர் சிவஆனந்தி, ஆணையாளர் வேலவன், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், வட்ட வழங்கல் அலுவலர் பாலசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது உடனடியாக இந்த கழிவுகள் அகற்றப்படும். மேலும் இதுபோல் நடக்காமல் இருக்க 10 நாட்களுக்குள் நிரந்தர தீர்வு காணப்படும் என நகராட்சி தலைவரும், ஆணையாளரும் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.