பேரணாம்பட்டில் பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


பேரணாம்பட்டில் பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

பத்திரப்பதிவு செய்ய 50 வருடத்திற்கு வில்லங்கசான்று கேட்பதால் பேரணாம்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வேலூர்

பத்திரப்பதிவு செய்ய 50 வருடத்திற்கு வில்லங்கசான்று கேட்பதால் பேரணாம்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

50 வருடத்திற்கு வில்லங்க சான்று

பேரணாம்பட்டு பங்களா மேடு பகுதியில் பத்திரப் பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பேரணாம்பட்டு நகரம் மற்றும் 24 ஊராட்சிகளில் உள்ள 50-க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரப் பதிவு அலுவலராக பொறுப்பேற்றுள்ள ராதிகா என்பவர் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் 50 வருடத்திற்கான வில்லங்க சான்று, மேலும் அரசு வழங்கும் பட்டாவிற்கும் 50 வருட வில்லங்க சான்று கேட்பதாக கூறப்படுகிறது.

மேலும் கிராமநிர்வாக அலுவலர் வழங்கியுள்ள சிட்டா அடங்கல் செல்லாது என்றும், தாசில்தாரிடம் சிட்டா அடங்கல் வாங்கி வர வேண்டும், மாலை 3 மணிக்குமேல் பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க முடியாது என்றும், கூட்டு பட்டாக்கள் பதிவு செய்ய மறுத்து தனிப்பட்டா வாங்கி வருமாறு கூறி தினமும் பொது மக்களை தொடர்ந்து அலைகழித்து வருவதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று பேரணாம்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்திரப்பதிவு அலுவலரை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நேற்று பத்திரப்பதிவு ஏதும் நடைபெறவில்லை, பத்திர எழுத்தர்களும் பத்திரப் பதிவில் ஈடுபட வில்லை. இது குறித்து பத்திரப்பதிவு அலுவலரிடம் கேட்டபோது உரிய ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்யுங்கள் என கூறினேன். வேறு எதுவும் சொல்லவில்லை. கிராமநிர்வாக அலுவலர் கையெழுத்திட்டு, போலி சீல் போட்டு எத்தனையோ சான்றுகள் இருப்பதால் தாசில்தாரிடம் சிட்டா, அடங்கல் வாங்கி வரும்படியும், வில்லங்க சான்று எதற்கு தேவையோ அதற்கு மட்டும் வாங்கி வரும்படியும் கூறினேன் என தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட பதிவு அலுவலரிடம் கேட்டபோது, பத்திரப்பதிவு விதிமுறைகள் படிதான் ஆவணங்கள் ஆவணங்கள் கேட்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் மாலை 3.30 மணி வரை பத்திரப்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும், மேலும் இதுகுறித்து நேரில் விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story