சத்துணவில் அட்டைபூச்சி கிடந்ததால் பரபரப்பு: அரசு பள்ளிக்கூடத்தில் பொதுமக்கள் முற்றுகை


சத்துணவில் அட்டைபூச்சி கிடந்ததால் பரபரப்பு: அரசு பள்ளிக்கூடத்தில் பொதுமக்கள் முற்றுகை
x

கொண்டலாம்பட்டி அருகே சத்துணவில் அட்டைபூச்சி கிடந்ததால் அரசு பள்ளிக்கூடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே திருவள்ளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 3-ம் வகுப்பு மாணவி நந்தினிக்கு உணவு வழங்கப்பட்டது. உணவை மாணவி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அதில் அட்டை பூச்சி இருந்தது தெரிய வந்தது. இதனால் மாணவ- மாணவிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அந்த மாணவிக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே மாணவியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

இதனை அறிந்த பொதுமக்கள் பள்ளிக்கூடத்தில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்தது. தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து சென்று முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் அன்பழகன், சத்துணவு அமைப்பாளர், சமையலரை அழைத்து துறைரீதியாக விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story