மின் தடையால் பொதுமக்கள் சாலை மறியல்
கீழப்புலியூர் கிராமத்தில் மின் தடையால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமத்தில் கடந்த ஒருவார காலமாக அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை 10 மணி முதல் இரவு வரை மின் தடை ஏற்பட்டதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சிரமம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் மற்றும் மின்வாரிய துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 8.30 மணியளவில் அப்பகுதியில் மின்வினியோகம் செய்யப்பட்டது. இதற்கிடையே மீண்டும் மின் தடை ஏற்பட்டதால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு மின் வினியோகம் சீரானது. இதில், சமாதானம் அடைந்த அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில், சமாதானம் அடைந்த அதிகாரியிடம் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர் பின்னர் இனிமேல் மின்சாரம் தடையில்லாமல் வரும் என்று வாக்குறுதி அளித்ததின் காரணமாக அனைவரும் கலைந்து சென்றனர்.