காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
புதுக்கோட்டை நகராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மாதத்தில் 15 நாட்கள் ஒரு முறை அல்லது அதற்கு மேலான நாட்களில் தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதனால் சீரான குடிநீர் வினியோகம் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் வசதி கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை திருக்கட்டளை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த மறியலால் போக்குவரத்து பாதிப்படைந்தது. இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினர். மேலும் குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அ.தி.மு.க.வை சேர்ந்தவர் கவுன்சிலராக இருப்பதால் இப்பகுதியில் குடிநீர் வினியோகிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டினர்.