கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு; திண்டுக்கல் எம்.பி.யை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்


கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு; திண்டுக்கல் எம்.பி.யை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 2 May 2023 2:30 AM IST (Updated: 2 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே கிராம சபை கூட்டத்தில் திண்டுக்கல் எம்.பி.யை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

கொடைரோடு அருகே ஜம்புத்துரைக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டியில் மே தினத்தையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுன்தாய் காட்டுராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிவராமன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சிவராமன் திட்டப்பணிகள் குறித்து அறிக்கை வாசித்தார். இதில், சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி கலந்துகொண்டார். கூட்டத்தில் நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சவுந்திரபாண்டியன், தாசில்தார் தனுஷ்கோடி, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட காமலாபுரம், ஊத்துபட்டி பகுதி பொதுமக்கள், குடிநீர், சாலை வசதி மற்றும் மயான வசதி கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினர். அதேபோல் ஜல்லிப்பட்டிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், சமுதாய கூடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பேசினர். அப்போது தி.மு.க.வை சேர்ந்த சிலர் குறுக்கிட்டு பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து சொல்ல விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலுச்சாமி எம்.பி. கூட்டத்தை பாதியில் முடித்துவிட்டு புறப்பட முயன்றார்.

அப்போது அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக கிராமசபைக்கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது. மேலும் எம்.பி., அதிகாரிகள் என அனைவரும் எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story