மல்லூர் அருகே, கழிவுநீர் கலப்பதால் சுகாதார கேடு:கிணற்றில் இறங்கி பொதுமக்கள் தர்ணா போராட்டம்


மல்லூர் அருகே, கழிவுநீர் கலப்பதால் சுகாதார கேடு:கிணற்றில் இறங்கி பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x

மல்லூர் அருகே கழிவுநீர் கலப்பதால் சுகாதார கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் கிணற்றில் இறங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

சுகாதார கேடு

பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சி காமராஜர் காலனியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள கழிவுநீர் தொட்டி அருகே குடிநீர் கிணறு உள்ளது. அங்கிருந்து பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதை சரி செய்து கொடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் காமராஜர் காலனியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கழிவு நீர் பாட்டிலுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

கிணற்றில் தர்ணா

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென அங்குள்ள பிரச்சினைக்குரிய கிணற்றில் இறங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் கிணற்றின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கழிவு நீர் கலக்கும் கிணற்றை சுத்தப்படுத்தி, பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும், மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் வருவாய் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இன்னும் 10 நாட்களில் கழிவுநீர் கலக்கும் கிணறு சுத்தம் செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கழிவு நீர் கலக்கும் கிணற்றை சுத்தம் செய்ய கோரி அப்பகுதி மக்கள் அதே கிணற்றில் இறங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story