தார்ச்சாலை, குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம்


தார்ச்சாலை, குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x

தார்ச்சாலை, குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம்

தஞ்சாவூர்

வல்லத்தில் தார்ச்சாலை, குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தர்ணா போராட்டம்

தஞ்சையை அடுத்துள்ள வல்லத்தில் சவேரியார் கோவில் தெரு, பெரியார் நகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர், அகிழாங்கரை மேட்டு தெரு ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து தெருக்களுக்கும் தரமான தார்ச்சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று வல்லம்-திருச்சி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை ஒன்றிய துணைத்தலைவர் அருளானந்தசாமி, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்த நாயகி, வல்லம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் கூறினர். இதையடுத்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை வாபஸ் பெற்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் வல்லம் பேரூராட்சி வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வல்லம்-தஞ்சை சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவுற்று பைப்லைன் அமைக்கும் பணிக்கு 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரி பணி முடிவுற்றவுடன் சுமார் 40 நாட்களில் குடிநீர் பிரச்சினை அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.


Next Story