இடங்கணசாலையில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு:சங்ககிரியில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
இடங்கணசாலையில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சங்ககிரியில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்ககிரி:
பேச்சுவார்த்தை
இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட கஞ்சமலையூர், இ.காட்டூர், மெய்யனூர், இடங்கணசாலை உள்ளிட்ட பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்வதும், சுடுகாட்டில் எரித்தும் வந்துள்ளனர். தற்போது அந்த இடத்தில் இடங்கணசாலை நகராட்சி சார்பில் மின்மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த இடத்தை சுத்தப்படுத்தி அளவீடு செய்ய நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட இடத்தில் மின்மயானம் அமைக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே நேற்று சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பானுமதி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இடங்கணசாலை நகராட்சி ஆணையாளர் நித்யா, காக்கா பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்பிரபு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தர்ணா போராட்டம்
பேச்சுவார்த்தையின் போது சம்பந்தப்பட்ட இடத்தில் மின்மயானம் அமைப்பதால், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதனை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து சங்ககிரி தாசில்தார் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மின் மயானம் அமைக்கக்கூடாது என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தாசில்தார் பானுமதி, பொதுமக்களிடம் உங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். இதை ஏற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.