பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்
விழுப்புரம்
பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) அனைத்து தாலுகா அலுவலகத்திலும் உள்ள குடிமைப்பொருள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்களால் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் தொடர்பாக முகாமில் கோரிக்கையும், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுவையும், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச்சான்று கோரும் கோரிக்கை மனுவையும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களையும் அளிக்கலாம். இம்முகாமின் மூலமாக பொதுமக்கள், பொது வினியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளலாம். இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.