பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் ஆபத்தை உணராமல் குளித்து மகிழும் பொதுமக்கள்
பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் ஆபத்தை உணராமல் குளித்து மகிழும் பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் அருகே கூவம் ஆற்றில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.7 கோடியே 80 லட்சம் - மதிப்பீட்டில், 100 மீட்டர் நீளம், 2 மீட்டர் உயரம் மற்றும் 75 சென்டி மீட்டரில், நவீன தானியங்கி இரும்பு மதகு வசதிகளுடன் தடுப்பணை கட்டப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டில் இருந்து கூவம் ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சத்தரை தரைப்பாலம் சேதமடைந்து கூவம் ஆற்றில் நீர் மற்றும் அருகில் உள்ள சப்பார் ஏரி உட்பட ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் வருகையால் தற்போது பிஞ்சிவாக்கத்தில் உள்ள இந்த தடுப்பணை நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. தற்போது இந்த தடுப்பணை முழுவதுமாக தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை என்பதால் பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் திரளான பொதுமக்கள் தடுப்பணையின் தண்ணீரை ரசித்தும், ஆபத்தை உணராமல் இறங்கி குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்துப்பணியில் வந்த கடம்பத்தூர் போலீசார் ஆபத்தை உணராமல் குளித்தவர்களை எச்சரித்து இனிமேல் இது போன்று குளிக்க கூடாது என அறிவுறுத்தி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.