12, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடக்கம்


12, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடக்கம்
x

12, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது.

பெரம்பலூர்

பொதுத்தேர்வு

தமிழகத்தில் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாட திட்ட பள்ளிகளில், 12, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி, 8 தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 9 பள்ளிகளில் 12, 10-ம் வகுப்புகள் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கியது.

பெரம்பலூரில் 2 மையங்களில் தேர்வு நடந்தது. முதல் நாளில் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில தேர்வும், 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தமிழ் தேர்வும் நடந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.30 மணி வரை நடந்தது. தேர்வுகளை அறை கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர். தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் எழுது பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஆசிர்வாதம் செய்து அனுப்பினர்

முன்னதாக தேர்வு எழுத செல்வதற்கு முன்பு மாணவ-மாணவிகளுக்கு, அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து கூறியும், சில ஆசிரியர்கள், பெற்றோர்கள் நெற்றியில் திருநீறு பூசியும் ஆசிர்வாதம் செய்து வழி அனுப்பினர். மாணவ-மாணவிகள் தேர்வு மையத்தில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறை எண்ணை பார்த்து விட்டு சென்றனர்.

சில மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு கூட அவசர அவசரமாக படித்ததை நினைவு கூர்ந்ததை காணமுடிந்தது. 12-ம் வகுப்புக்கு அடுத்த மாதம் (மார்ச்) 31-ந்தேதியுடனும், 10-ம் வகுப்புக்கு 21-ந்தேதியுடனும் பொதுத் தேர்வுகள் முடிவடைகிறது.


Next Story