பொதுநிதியை சரியான வளர்ச்சி பணிகளுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும்
பொதுநிதியை சரியான வளர்ச்சி பணிகளுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும்
நாகை ஊராட்சி ஒன்றியத்தில் பொதுநிதியை சரியான வளர்ச்சி பணிகளுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
நாகை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் அனுசியா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.
இதன் விவரம் வருமாறு:-
மணிவண்ணன்(அ.தி.மு.க.): நாகை ஒன்றியம் வடக்குபொய்கைநல்லூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் குக்கிராமங்கள் மேம்பாட்டு திட்டம் வாயிலாக புதிய உழவர் தெரு, ஆதிதிராவிடர் குடியிருப்பு செல்லும் சாலை, புதிய உழவர் தெரு அருகில் உள்ள ஆதிதிராவிடர் மயான சுற்றுச்சுவர் ஆகியவற்றை அமைத்து தர வேண்டும்.
காளிதாஸ்(அ.தி.மு.க.): அக்கரைப்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சிமெண்டு சாலை சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும்.
எழுத்து மூலமாக கொடுக்க வேண்டும்
தலைவர்: நாகை ஊராட்சி ஒன்றியத்தில் பொதுநிதியை சரியான வளர்ச்சி பணிகளுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். எனவே அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எழுத்து மூலமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்: நாகை பகுதிக்கு சட்டபேரவை மதிப்பீட்டு குழு விரைவில் வருகை தரவுள்ளது. எனவே உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் செய்து முடிக்க வேண்டும். மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் போது குறைகள் ஏதும் இல்லாத வகையில் பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார்.