தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் குவிந்த பொதுமக்கள்


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 Oct 2022 12:30 AM IST (Updated: 18 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் குவிந்த பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் சாந்தியிடம் மனு கொடுத்தனர். இதில் நேற்று ஒரே நாளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 449 பேர் மனுக்கள் கொடுத்தனர்.

தர்மபுரி

449 மனுக்கள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 449 மனுக்களை அளித்தனர்.

இந்த கூட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள வத்தல் பட்டி கிராம மக்கள் அளித்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை இரு புறங்களிலும் கால்வாயுடன் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவற்றை வழங்கி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவாக தீர்வு காண உத்தரவிட்டார்.

பாராட்டு சான்றிதழ்

கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.87 ஆயிரம் மதிப்பில் இலவச தையல் எந்திரங்கள் மற்றும் சலவை பெட்டிகள் வழங்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் 100 சதவீதம் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை முழுமையாக மேற்கொண்ட 34 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தணிகாசலம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், தேர்தல் பிரிவு தாசில்தார் சவுகத் அலி உள்பட துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story