பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக மண்பானை வழங்க வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு


பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக மண்பானை வழங்க வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
x

பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக மண்பானை வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு

பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக மண்பானை வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதுார் மேற்கு வீதியை சேர்ந்த பொங்கியப்பன் (வயது 90), அவருடைய மனைவி காவேரியம்மாள் (85) ஆகியோர் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

எங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய 2 சொத்துக்களை, எங்களுடைய மகன்கள் கனகசுந்தரம், சக்திவேல் ஆகியோருக்கு எழுதி கொடுத்தோம். எங்கள் வாழ்க்கையை கழிப்பதற்காக, மகன்களிடம் இருந்து பணம், மருத்துவ உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே, எங்கள் சொத்துகளை மீண்டும் எங்களுக்கே வந்தடையும் வகையில், நாங்கள் எழுதி கொடுத்த ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து 2 முறை மனுக்கள் வழங்கியும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்கள் சொத்தை மீட்டு எங்களுக்கே வழங்க நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மண்பானை

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க மாவட்ட தலைவர் எஸ்.கனகராஜ் தலைமையில் மண்பாண்ட தொழிலாளர்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தை பொங்கலின்போது, ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு சார்பில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்பட பல்வேறு பொருட்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல் விளையும் புது அரிசியை புதுப்பானையில் பொங்கலிடும் வகையில், களி மண்ணால் ஆன புதிய பானை, புதிய அடுப்புகளை அரசு கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதன் மூலம் பாரம்பரியமான பொங்கல் விழா நடப்பதுடன், மண் பாண்ட தொழிலாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். மேலும் மழைக்காலங்களில் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பகுதியை சேர்ந்த தாண்டாயாள் (80) என்பவர் கொடுத்திருந்த மனுவில், எனது நிலத்தை அருகே உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே அந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும்' என்று கூறி இருந்தார்.

167 மனுக்கள்

எழுமாத்தூர் அண்ணா நகர் புதுக்காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'எங்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆனதால் சுவர்களில் வெடிப்பு விழுந்தும், கான்கிரீட் சிலாப், மேற்கூரை போன்றவை பெயர்ந்தும், வீட்டினுள் கம்பிகள் வெளியே தெரியும் படியும் மோசமாக காணப்படுகிறது. மேலும் மழை நீரும் வீட்டுக்குள் விழுகிறது. எனவே எங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் மொத்தம் 167 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குமரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story