விலை குறைவை தடுத்து கொப்பரை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு


விலை குறைவை தடுத்து கொப்பரை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
x

விலை குறைவை தடுத்து கொப்பரை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு


விலை குறைவை தடுத்து கொப்பரை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

கொப்பரை தேங்காய்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். சென்னிமலை பகுதியை சேர்ந்த கொப்பரை விவசாயிகள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கொப்பரை விலை ஒரு கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.83-க்கு விற்பனையாகிறது. இது மிகவும் குறைந்த விலையாகும். ஏற்கனவே கொப்பரை தேங்காய் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் இந்த விலை குறைவு எங்களை மேலும் நஷ்டத்துக்குள்ளாக்கும். விலை குறைந்துள்ள இந்த சூழ்நிலையில் மத்திய அரசு, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலமாக கொள்முதல் செய்த கொப்பரையை சந்தைப்படுத்தினால் கொப்பரை தேங்காய் விலை மேலும் வீழ்ச்சியடையும். எனவே அரசு, கொப்பரை தேங்காயை எண்ணெய்யாக்கி, மத்திய தொகுப்பில் நாடு முழுவதும் விற்பனை செய்யவேண்டும். மேலும், விவசாயிகளை பாதுகாக்க மாநில அரசும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்.

ரோட்டை அகலப்படுத்த வேண்டும்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், 'விவசாயக்கூலி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடும், வீட்டுமனையும் வழங்க வேண்டும். இடிந்து விழும் நிலையிலுள்ள தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

திராவிடத் தமிழர் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில், 'அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி கிராமம், மொரளி ஆலமர பஸ் நிறுத்தம் அருகில் கடந்த 1-ந்தேதி சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதே இடத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் சேலம் மாவட்டம் கொளத்தூரை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த பகுதியில் அடிக்கடி விபத்தினால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க குறுகலாக உள்ள ரோட்டை அகலப்படுத்த வேண்டும். மேலும் ரோட்டில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். குறுகலான வளைவுகள் உள்ள அந்த பகுதியில் சாலை வளைவுகளில் எதிரில் வாகனங்கள் வருவதை தெரிந்துகொள்ளும் வகையில் கண்ணாடிகள் அமைக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

212 மனுக்கள்

மொடக்குறிச்சி தூரபாளையம் பகுதியில் உள்ள பொதுமயானத்தில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். இதேபோல் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 212 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி அதை சம்பந்தபட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் அவர், மாற்றுத்திறனாளி அளித்த கோரிக்கை மனுவினை ஏற்று உடனடியாக ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பிலான 3 சக்கர சைக்கிளை வழங்கினார்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story