பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலெக்டர் கார்மேகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 365 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகள் மனு
இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் கார்மேகம் குறைகளை கேட்டு அவர்களிடம் மனுக்களை வாங்கினார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 5 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மயில் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.