மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை முழுநேர பணியாளர்களாக்க வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு


மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை முழுநேர பணியாளர்களாக்க வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு
x

மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை முழுநேர பணியாளர்களாக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு

மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை முழுநேர பணியாளர்களாக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

உதவித்தொகை

மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தேசிய பார்வையற்றோர் இணையம் அமைப்பின் சார்பில் பார்வையற்றவர்கள் ஒருங்கிணைப்பாளர் பி.ஜெயதேவன் தலைமையில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.1,000 தமிழக அரசு வழங்கி வருகிறது. அண்டை மாநிலங்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,600 முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை வழங்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

வீடுகள்

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

தமிழகத்தில் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 11 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த பணியாளர்களுக்கு 2 மணி நேர பணி என்று கூறப்பட்டு ரூ.4 ஆயிரத்து 500 ஊக்கத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வீடு, வீடாக சென்று மருந்து வழங்குவது, ரத்த அழுத்தம், நீரழிவு நோய் கண்டறிதல், தொற்று நோய் கண்டறிதல், ஆன்லைனில் பதிவு செய்தல், முகாம்களில் முழுநேரம் பணியாற்றுதல் போன்ற பணிகளை செய்து வருகிறோம். எனவே பணிகளுக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நேரத்தை நிர்ணயம் செய்து, முழுநேர பணியாளர்களாக்க வேண்டும். தீபாவளி பண்டிகை கால செலவுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும். ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தனர்.

தாயகம் திரும்பியோரின் தாயக மக்கள் வாழ்வுரிமை நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், "கடந்த 2005-ம் ஆண்டு 700 குடும்பத்தினருக்கு பெருந்துறை அருகே வடமுகம் வெள்ளோடு அருகே விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. அங்கு குடியிருக்க தகுதி இல்லாமல் இருந்ததால், அரசு கொடுத்த நிலத்தை மீண்டும் திரும்ப பெற்றுக்கொண்டது. அதற்கு பதிலாக சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கி தரவேண்டும் என்று 540 மனுக்களை சமர்ப்பித்தோம். அதற்கு ரூ.68 ஆயிரம் செலுத்த சொன்னார்கள். ஆனால் தற்போது ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். இந்த தொகையை எங்களால் செலுத்த முடியாததால் இலவசமாக வழங்க வேண்டும்", என்று கூறப்பட்டு இருந்தது.

தார்சாலை

எழுமாத்தூர் ஊராட்சி கவுன்சிலர் தங்கவேல் கொடுத்த மனுவில், "எழுமாத்தூர் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் அருகில் மண் சாலை உள்ளது. மழை காலத்தில் விவசாயிகள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது எனவே தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டும்" என்று கூறிஇருந்தார்.

மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளி ஊராட்சியில் குடிநீர் மோட்டார் அமைப்பது உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி கவுன்சிலர்கள் புகார் மனு கொடுத்தனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story