ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு


ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 30 July 2023 1:00 AM IST (Updated: 30 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பலக்கனூத்துவில், மயானம் அருகில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திண்டுக்கல்

ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பலக்கனூத்துவில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அப்போது பலக்கனூத்துவில் உள்ள மயானம் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அங்கு ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான கட்டிட பணி தொடங்கப்பட்டது.

இதற்கிடையே கட்டிட பணி நடந்த இடத்துக்கு பலக்கனூத்துவை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று வந்தனர். அப்போது அவர்கள், மயானம் அருகில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலேயே புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கட்டிடப்பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மட்டும் போலீசார், ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே போராட்டம் நடத்தியவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பிறகு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கான கட்டிட பணி மீண்டும் தொடங்கியது.


Next Story