கால்நடை மருத்துவமனை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
தொரப்பாடியில் கால்நடை மருத்துவமனை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
வேலூர் தொரப்பாடி ஜெயில் அருகே ராம்சேட் நகர் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராம்சேட்நகர் நுழைவு பகுதி அருகே காலிஇடம் உள்ளது. இங்கு பன்முக கால்நடை மருத்துவமனை கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு மருத்துவமனை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட உயர் அதிகாரிகளின் முடிவின்படி தான் நாங்கள் செயல்பட முடியும். எதுவாயினும் உங்கள் புகார்களை மாவட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
புறநகர் பகுதியில்...
இந்த பகுதியில் கால்நடை மருத்துவமனை கட்டினால் ஏராளமான கால்நடைகள் இந்த பகுதி முழுவதும் கட்டுவார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும். எனவே இப்பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டக்கூடாது. புறநகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் ஏராளமாக உள்ளது. அந்த பகுதியில் வேறு எங்காவது மருத்துவமனை கட்டலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் மருத்துவமனை கட்ட வேறு இடம் காண்பிப்பதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கூறி அங்கு அழைத்து சென்றனர். முன்னதாக உதவி கலெக்டர் கவிதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.