ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு


ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
x

திருப்பத்தூர் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் உண்ணாவிரதம் நடத்தப்போவதாகவும் கூறினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் உண்ணாவிரதம் நடத்தப்போவதாகவும் கூறினர்.

ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ்

திருப்பத்தூர் அருகே உள்ள பெரிய ஏரி 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த பெரிய ஏரிக்கு சொந்தமான இடங்களில் பொன்னியம்மன் கோவில் தெரு, சிவராஜ்பேட்டை, போஸ்கோ நகர், தண்டபாணி கோவில் தெரு பகுதி-2, பழனிச்சாமி ரோடு, திருப்பத்தூர்- வேலூர் மெயின் ரோடு, திருப்பத்தூர் ஏரிக்கரை பகுதி ஆகிய பகுதிகளில் சுமார் 2,500 குடும்பத்தினர் வீடுகள் மற்றும் கடைகளை கட்டி வசித்து வருகிறார்கள்.

பெரிய ஏரிக்கு சொந்தமான பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி நீர்வளத் துறை சார்பில் நேற்று முன்தினம் ஆங்காங்கே பேனர்கள் வைத்து, ஆட்டோ மூலம் அறிவிப்பு செய்து, வீடுகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருந்தது.

அதில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் நீர்வளத் துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான செலவு தங்கள் கணக்கில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இதனால் பொதுமக்கள் இன்று பொன்னியம்மன் கோவில் அருகே உள்ள சமுதாயக் கூட்டத்தில் ஒன்று திரண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது திடீரென நோட்டீஸ் கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறினால் நாங்கள் எங்கே செல்வது, இலங்கை அகதிகளுக்கு கூட இடம் கொடுக்கும் தமிழக அரசு எங்களுக்கு எந்த இடமும் கொடுக்காமல் உடனடியாக காலி செய்ய சொல்வது எந்த விதத்தில் நியாயம். எங்களுக்கு அதே இடத்தில் தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும் எனக் கூறினார்கள்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கலெக்டரை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கமாக எடுத்து கூறுவது, அடுத்த கட்டமாக அகிம்சை முறையில் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ், பா.ஜ.க. பொதுச் செயலாளர் கண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் சதீஷ், சரவணன், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story