கல்குவாரியில் பாறை உடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
முள்ளங்கினாவிளை பகுதியில் கல்குவாரியில் பாறை உடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கருங்கல்:
முள்ளங்கினாவிளை பகுதியில் கல்குவாரியில் பாறை உடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்குவாரி
கருங்கல் அருகே முள்ளங்கினாவிளை பகுதியில் அரசு அனுமதியுடன் கருங்கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியை சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள் விளைநிலங்கள் உள்ளன. இந்த குவாரியால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்ப்படுவதாக கூறி மக்கள் எதிர்ப்பு ெதரிவித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக பலமுறை மூடப்பட்டது. ஆனாலும், அரசு விதிமுறைகளை பின்பற்றி செயல்படும் என கூறி அதிகாரிகளின் உத்தரவின் பேரில் திறந்து செயல்பட தொடங்கியது.
முற்றுகையிட முயற்சி
இந்தநிலையில் அரசு அனுமதித்த அளவை விட அதிக வெடிமருந்துகளை பயன்படுத்தி பாறைகளை உடைப்பதாக கூறி நேற்று மதியம் அந்த பகுதி பொதுமக்கள் குவாரிக்குள் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பாறைகளை உடைக்க தயார் நிலையில் இருந்த வெடிகள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடினர்.இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், எங்களுக்கு தொடர் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த குவாரிக்கு எதிராக போராட்டங்களை நடத்தும்போது, அரசியல் கட்சி தலைவர்களோ, மக்கள் பிரதிநிதிகளோ வருவதில்லை. அதிகாரிகளும் குவாரியை கண்காணிப்பதில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.