நிரந்தர பட்டா கேட்டு பொதுமக்கள் மனு


நிரந்தர பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
x

நிரந்தர பட்டா கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

பெரம்பலூர்

நாட்டு மரங்களை நடக்கோரி மனு

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுக்களில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் சாலையோரங்களில் அந்நிய நாட்டு மரங்களை நடாமல் பாரம்பரியமான தமிழ்நாட்டு மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அடிப்படை வசதிகள்

ஆலத்தூர் தாலுகா, பழைய விராலிப்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், பழைய விராலிப்பட்டியில் பொதுமக்கள் குடிப்பதற்கு காவிரி குடிநீர், குளிப்பதற்கு தண்ணீர் தொட்டி, மகளிர் சுகாதார வளாகம், மயான கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

இரூர் கிராம மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், இரூரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. கூத்தனூர் கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், கிராம மாணவ-மாணவிகள் பள்ளி சென்று வர கூத்தனூர் வழியாக செட்டிகுளம், பாடாலூர் ஆகிய பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

நிரந்தர பட்டா கேட்டு...

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமம் எம்.பி.சி. காலனியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பா.ஜ.க.வினருடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எம்.பி.சி. காலனியில் வசிக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு பெரம்பலூர் தனி தாசில்தார் மூலமாக டி-காடு பட்டா வழங்கப்பட்டது.ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், நிரந்தர பட்டா வழங்குமாறு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் ஆய்வு செய்து நிரந்தர பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். மேலும் அவர்கள் பட்டா வழங்கவில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

நேரடி நெல் கொள்முதல்

பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கொடுத்த மனுவில், கல்பாடி பிரிவு ரோடு அருகே உள்ள ஒருவரது நிலத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் கிணறு வெட்டியதற்கு நிலுவை தொகையை திருப்பி தராமல், அதனை கேட்க சென்ற அவர்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் கிராம விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கிராமத்தில் இரண்டாம் போக நெல் சுமார் 500 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே கலெக்டர் எங்கள் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

பட்டா

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நரிக்குறவர் நல சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் நரிக்குறவர் காலனியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க, பழங்குடியினர் நரிக்குறவர் சமூக மக்கள் 101 பேரின் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு மாற்றாக, அவர்களுக்கு தலா ஒரு ஏக்கர் விவசாய நிலமும், வீட்டில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த விவசாய நிலத்திற்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் சுமார் 30 பேருக்கு வீட்டுமனை வழங்கப்பட்டதற்கு பட்டாவும் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே 101 பேருக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கி, அதற்கு பட்டா வழங்கவும், 30 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த வாரத்தில் இருந்து எங்களின் போராட்டம் தொடரும், என்றார்.

மொத்தம் 297 மனுக்கள்

கூட்டத்தில் மொத்தம் 297 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு இலவச பஸ் பயண அட்டையை யும் கலெக்டர் வழங்கினார்.


Related Tags :
Next Story