ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு


ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு
x

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர்-அரியலூர் சாலையில் அருமடல் பிரிவு சாலையில் உள்ள முத்து நகர், முல்லை நகரை சேர்ந்த பொதுமக்கள் சிலர் வந்து கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர்.

அதில், செங்குணம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட எங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி செய்து தர வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையையும், புளு மெட்டல் கிரஷர்களையும் அகற்ற வேண்டும். பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும். எங்கள் பகுதிகளை கவுல்பாளையம் கிராம ஊராட்சியுடன் இணைக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். ஏற்கனவே அவர்கள் கடந்த வாரம் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுவாக ஒரு மனுவினை கலெக்டரிடம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிப்பு

வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் 2-வது வார்டு பொதுமக்களில் சிலர் வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் மாரியம்மன் கோவிலின் பின்புறம் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் மது பாட்டிலை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர்.

இதனால் அந்த இடத்தில் உள்ள கைபம்பிலும், பொதுக்குழாயிலும் தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நின்று பஸ் ஏற முடியாத நிலை உள்ளது. அந்த பகுதியில் நூலகத்திற்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. எனவே அந்த கடையை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மொத்தம் 227 மனுக்கள்

பெரம்பலூர் நகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் தெற்கு அருணா நகர் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து சுவர் கட்டியுள்ளார். மேலும் அவர் ஏரிக்கு செல்லும் வடிகால் பாதையிலும் ஆக்கிரமித்துள்ளார். எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர்.

வேப்பந்தட்டை தாலுகா, வெங்கலம், கிருஷ்ணாபுரம் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் ஒருவர் மட்டும் மாறி மாறி பணிபுரிந்துள்ளார். 2 ரேஷன் கடைகளில் தனித்தனியாக விற்பனையாளரை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 227 மனுக்கள் பெறப்பட்டன.


Related Tags :
Next Story