ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு பொதுமக்கள் மனு


திருவெறும்பூர் மலைக்கோவில் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருச்சி

திருச்சி, ஜூன்.7-

திருவெறும்பூர் மலைக்கோவில் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகள் போன்றவை கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் ஜனநாயக சமூக நலக்கூட்டமைப்பினர் கொடுத்த மனுவில், திருச்சி-தஞ்சை சாலையில் பால்பண்ணை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

திருச்சி மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் கொடுத்த மனுவில், திருச்சி மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலையும், விபத்துக்களையும் கட்டுப்படுத்த, போக்குவரத்துக்கு இடையூறாக போடப்பட்டுள்ள தரைக்கடைகள், சாலையோர தள்ளுவண்டிகள், ஆட்டோ நிறுத்தங்கள் போன்றவற்றை அகற்றி உரிய திட்டமிடலுடன் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் கிராமமக்கள் ஜல்லிக்கட்டு காளையுடன் வந்து, ஜல்லிக்கட்டை தங்கள் கிராமத்தில் நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். சோழமாதேவி அம்பேத்கர் நகர் பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அத்துடன் எங்கள் பகுதிக்கு மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

லால்குடி ரெட்டிமாங்குடி அம்பேத்கர் தெரு பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். எங்கள் ஊரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செல்லியம்மன் கோவில் உள்ளது. 30 ஆண்டுகள் கழித்து திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா நடத்துவது தொடர்பான ஊர் பொதுக்கூட்டத்தில் எங்களுக்கு வரியில்லை என்று கூறி ஒதுக்குகிறார்கள். எனவே எங்களுக்கு சாமிதரிசனம் செய்யும் உரிமை பெற்று தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்

நாள் தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை குறைக்க அகலப்படுத்தப்பட்ட இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கவேண்டும். திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்களில் ஜீயபுரம், பெருகமணி, பெட்டவாய்தலை, குளித்தலை பயணிகளை ஏற்ற மறுக்கும் அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story