மின்சாரம் துண்டிப்பை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்
தூத்துக்குடியில் மின்சாரம் துண்டிப்பை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் மின்சாரம் துண்டிப்பை கண்டித்து பொதுமக்கள் நேற்று காலையில் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மறியல்
தூத்துக்குடி மீளவிட்டான் கக்கன்ஜி நகர் பகுதி மக்கள் நேற்று காலையில் மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, கக்கன்ஜி நகர் பகுதிக்கு செல்லும் உயர் அழுத்த மின்சார ஒயர் தரம் இன்றி இருப்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. அதிக அழுத்தத்துடன் மின்சாரம் வரும் போது, வீட்டில் உள்ள மின்சார ஒயர்கள், வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து வருகின்றன. அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். ஆகையால் இப்பகுதியில் மின்சார ஒயரை மாற்றி சீரான மின்சாரம் வழங்க நடவடிககை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து கக்கன்ஜி நகர் பகுதிக்கு செல்லும் மின்சார ஒயரை மாற்றும் பணிகளை மின்வாரிய அதிகாரிகள் தொடங்கினர்.