சாலை அமைக்க தனிநபர் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்கள் மறியல்
ஜோலார்பேட்டை அருகே சாலை அமைக்க தனிநபர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை அமைக்க எதிர்ப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் ஊராட்சி தாயப்பன் வட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இங்குள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குண்டும் குழியுமான இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த சாலை தனிநபருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வருவதாக கூறி தனிப்பட்ட குடும்பத்தினர் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று புதுப்பேட்டை வழியாக திருப்பத்தூர் செல்லும் சாலையில் அடியத்தூர் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனிநபர் எதிர்ப்பு தெரிவிக்கும் இடத்தை அளவீடு செய்து சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.