அனுமதி வாங்கி நடத்தக்கோரி பொதுமக்கள் மறியல்


அனுமதி வாங்கி நடத்தக்கோரி பொதுமக்கள் மறியல்
x

அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி வாங்கிய பிறகே நடத்த வேண்டும் என்று கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

கோவில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே புதூர் கிராமத்தில் பிடாரி அம்மன், கரைய கருப்பர், அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில்கள் உள்ளது. இதில் பிடாரி அம்மன் மற்றும் கரைய கருப்பர் ஆகிய கோவில்களுக்கு கடந்த திங்கட்கிழமையும், அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில்களுக்கு இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் செய்தனர்.

இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பையும் அழைத்து 7 முறைக்கு மேல் சமாதான கூட்டம் நடத்திய பின்னர் கும்பாபிஷேக விழாவிற்கு சட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் கடந்த திங்கட்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த ஒருதரப்பினர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறி புதுக்கோட்டை-இலுப்பூர் சாலையில் தாண்றீஸ்வரம் என்னும் இடத்தில் ஒருதரப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

இதற்கிடையே மறியலில் ஈடுபட்ட சிலர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அன்னவாசல் போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். இதில் சிலர் கீழே மயங்கி விழுந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தாசில்தார் ரமேஷ், இலுப்பூர், புதுக்கோட்டை, கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் காயத்திரி, ராகவி, செங்குட்டுவன் வேலவன், இன்ஸ்பெக்டர்கள், ராதாகிருஷ்ணன், கோபால கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- இலுப்பூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரே கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர்களில், ஒரு தரப்பினர் கும்பாபிஷேகத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என மறியல் செய்த நிலையில், மற்றொரு தரப்பினர் கும்பாபிஷேகம் நடத்த கூடாது என மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோவிலை சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story