விருத்தாசலத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் மறியல்


விருத்தாசலத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் மறியல்
x

விருத்தாசலத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விருத்தாசலம் நீதிமன்றம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் இரு புறங்களிலும் மணலூர் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதி மக்கள் மேம்பாலத்தின் கீழே அமைந்துள்ள சர்வீஸ் சாலை வழியாகத் தான் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சர்வீஸ் சாலையை அதிகாரிகள் சரிவர பராமரிக்கவில்லை. மேலும் பாலத்திற்கு முன்புறம் இருந்த கழிவுநீர் கால்வாய் சிறுபாலம் தூர்ந்து போய் கிடக்கிறது.

இதன் காரணமாக மழைநீர் சாலையில் தேங்கி நின்றதால், அதில் இருந்த ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி மெகா பள்ளமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சர்வீஸ் சாலையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பா.ம.க. நகரமன்ற உறுப்பினர் சிங்காரவேல் தலைமையில், பா.ம.க. ஒன்றிய செயலாளர் ஆசா. வெங்கடேசன் முன்னிலையில் விருத்தாசலம் ரெயில்வே மேம்பாலம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கடும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story