குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

தரகம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

மின்மோட்டார் பழுது

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டி அருகே தேவர்மலையில் சுமார் 200-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவர்மலை ஊராட்சி நிர்வாகம் சார்பாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே குடிநீர் தொட்டி அமைத்தும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த கடந்த 16-ந்தேதி 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் மின்மோட்டார் பழுதாகி உள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் வந்த பழுதான மின் மோட்டாரை சரி செய்வதற்காக எடுத்து சென்றனர். பின்னர் ஊராட்சி நிர்வாகம் சார்பாக லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தன. ஆனாலும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து பழுதான மின் மோட்டாரை சரி செய்து பொருத்தி குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தரகம்பட்டி அருகே உள்ள பாளையம்-தரகம்பட்டி மெயின் சாைலயில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் ஒன்றிய ஆணையர் கிரிஸ்டி, தேவர்மலை ஊராட்சி மன்றத்தலைவர் நக்கீரன், சிந்தாமணிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், தேவர்மலை கிராம நிர்வாக அதிகாரி சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதில் பழுதான மின் மோட்டாரை உடனடியாக சரி செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் பாளையம்-தரகம்பட்டி மெயின் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story