கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் காகுப்பம் பகுதியில் உள்ள ஏரியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக இந்த சுத்திகரிப்பு நிலையம் முறையான பராமரிப்பு இல்லாமல் செயல்பாட்டில் இல்லாத காரணத்தினால் கழிவுநீர் நேரடியாக ஏரி மற்றும் கால்வாய் வழியாக விடப்படுகின்றது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி, பலமுறை பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது அப்பகுதியில் மேலும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மற்றும் கால்வாய் அமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

பொதுமக்கள் போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து சுத்திகரிப்பு நிலையம் அருகே நடைபெற்ற பணிகளை தடுத்து நிறுத்தினர். அதோடு பணிகளை மேற்கொள்ள கொண்டு வரப்பட்டிருந்த பொக்லைன் எந்திரத்தையும் அவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு பணியில் இருந்த நகராட்சி ஊழியரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளதால் ஏரி முழுவதும் கழிவுநீர் நிரம்பி சுகாதாரமற்ற முறையில் மாறியுள்ளது. மேலும் நிலத்தடி நீரும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கலந்த தண்ணீர் வெளியேறுவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் நோய் தொற்றுக்கும் ஆளாகி வருகின்றனர். எனவே இந்த ஏரியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது இப்பகுதியில் மேலும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை நகராட்சி நிர்வாகம் முழுமையாக கைவிட்டு கழிவுநீர் களமாக மாறியுள்ள காகுப்பம் ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும் என்றனர்.

பொதுமக்களின் இந்த போராட்டத்தினால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


Next Story