கோவில் நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


கோவில் நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x

நெடுங்குடி கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருந்த கோவில் நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கைலாசநாதர் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், நெடுங்குடி கிராமத்தில் கைலாசநாதர் சமேத பிரசன்னநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுமார் 150 ஆண்டுகளாக சுவாமி அம்பு போடும் மகர் நோன்பு திடல் உள்ளது.

இந்த திடலை சுவாமி அம்பு போடுவதற்காக 5 தலைமுறைக்கு மேலாக அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்தில் தனக்கு பட்டா உள்ளதாக கூறி இடத்தை அளந்து காண்பிக்க வேண்டும் என தனிநபர் ஒருவர் திருமயம் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளார்.

ஆர்ப்பாட்டம்

அந்த மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்தை அளப்பதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். இதைக்கண்ட கிராம மக்கள் 5 தலைமுறைகளாக நாங்கள் பயன்படுத்தி வரும் வழிபாட்டுக்கான இடத்தில் தனி நபர் எவ்வாறு பட்டா பெற்றார் என்று கூறி நெடுங்குடி கைலாசபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் ஒன்று திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கீழாநிலைக்கோட்டை ஆர்ச் அருகே அறந்தாங்கி-காரைக்குடி மெயின் ரோட்டில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கீழாநிலைக்கோட்டை அருகே அறந்தாங்கி-காரைக்குடி மெயின் ரோட்டில் ஊர்வலமாக சென்று சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து அங்கு வந்த கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்போது நிலத்தை அளக்க அனுமதிக்க மாட்டோம். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டோம். உயர் அதிகாரிகள் வரும்வரை அமைதியாக இருங்கள். அவர்கள் வந்து உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறினர். இதையடுத்து அமைதியாக கிராமமக்கள் அங்கிருந்து ஊர்வலமாக புதுநிலைப்பட்டி குதிரை திடலில் வந்து அமர்ந்தனர்.

பட்டாவை ரத்து செய்து...

பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராமமக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் 5 தலைமுறைகளாக நாங்கள் சுவாமி அம்பு போடும் திடலாகவும், வனத்துறையினர் தைல மரங்களை வளர்த்து வந்த இடத்தில் தனிநபர் எவ்வாறு பட்டா பெற்று இருக்க முடியும். உண்மைக்கு புறம்பாக பட்டா பெற்றுள்ளனர். ஆகவே அந்த பட்டாவை ரத்து செய்து மேற்கண்ட இடத்தை நிரந்தரமாக கைலாசநாதர் கோவில் சுவாமி அம்பு போடும் திடலாக இருக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

நீதிமன்றத்தை நாடுங்கள்

அப்போது தாசில்தார் புவியரசன், அதற்கான அதிகாரம் என்னிடம் கிடையாது. உங்களுடைய எதிர்ப்பு இருப்பதால் நாங்கள் இந்த இடத்தை அளக்காமல் திரும்பி செல்கிறோம். ஆனால் 2 தரப்பினரும் நீதிமன்றத்தை நாடி பிரச்சினைக்குரிய இடம் யாருக்கு சொந்தமானது என முடிவு செய்து கொள்ளுங்கள். நீதிமன்ற வழிகாட்டுதல் படி இந்த நிலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார். ஒரு மாத காலத்திற்குள் நீங்கள் நீதிமன்றத்தை நாடி இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றார். இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story