புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் 10 நிமிடத்தில் கடை மூடப்பட்டது
அணைக்கட்டு அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக 10 நிமிடத்தில் கடை மூடப்பட்டது.
அணைக்கட்டு அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக 10 நிமிடத்தில் கடை மூடப்பட்டது.
டாஸ்மாக் கடை
அணைக்கட்டு தாலுகா ஒதியத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. டாஸ்மாக் கடை ஒதியத்தூர் பகுதியில் வரக்கூடாது என முன் கூட்டியே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த வாரம் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் ஒப்புதல் இல்லாமலும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மதுபானங்களை ஒவ்வொன்றாக கொண்டு வந்து கடையில் அடுக்கி வைத்தனர்.
முற்றுகை
பீர் மற்றும் விலை உயர்ந்த மதுபானங்களை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதற்காக குளிர்சாதன பெட்டிகளையும் அங்கு கொண்டு வந்து வைத்தனர்.
இதனிடையே டாஸ்மாக் கடை திறக்கும் தகவல் காட்டு தீ போல் ஒதியத்தூர், கொம்ளாகுட்டை, ஈ.டி.ஆர். பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு பரவியது. ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ேடார் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். குளிர்பதன பெட்டியை கடையிலிருந்து அவர்களே வெளியில் தூக்கி வந்து வேனில் ஏற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார், ஒதியத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கிளாடிசன், ஒன்றிய கவுன்சிலர் மெரினாகோபி உள்பட ஊராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் மற்றும் துணை தாசில்தார்களும் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பில் கூறுகையில், ''இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் பொதுமக்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என பல தரப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மேலும் குடிகாரர்கள் விவசாய நிலத்தில் அமர்ந்து மது குடித்துவிட்டு அந்த பாட்டில்களை அங்கேயே போடுவது, பிளாஸ்டிக் கவர்களை போடுவது, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும். எங்கள் பகுதியில் உள்ள இரண்டு கோவில்களிலும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேர்த்தி கடனை செலுத்தி வழிபாடு செய்து அன்னதானங்கள் வழங்கி வருகின்றனர். இதனால் குலதெய்வ வழிபாடும் தடைப்படும். ஆகவே டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என கோரிக்ைக வைத்தனர்.
எம்.எல்.ஏ.விரைவு
போராட்டம் நடந்த இடத்துக்கு அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் சென்று வேலூர் டாஸ்மாக் மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக இழுத்து மூடும்படி டாஸ்மாக் கடை மேலாளர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து திறக்கப்பட்ட 10 நிமிடத்தில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.