அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சி கவுண்டம்பட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி சார்பாக அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை ஏற்றி பொது மக்களுக்கும், அங்குள்ள பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி மாணவ, மாணவிகளும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில், குடிநீரை முறையாக வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று கவுண்டம்பட்டி பிரதான சாலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவுண்டம்பட்டி மற்றும் மூவராயன் பாளையத்தில் இருந்து திருச்சி சத்திரம் பஸ்நிலையம் நோக்கி சென்ற 3 அரசு பஸ்களை சிறைபிடித்தனர். இதனால் மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார், மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்கும் வகையில் லாரி மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்தது. இந்த போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.