குப்பை லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
கடையநல்லூரில் குப்பை லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர்- கிருஷ்ணாபுரம் 5-வது வார்டு மேற்கு மலம்பேட்டை ரோடு பகுதியில் குப்பைகளை தரம் பிரிக்கும் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் முழுமையாக அள்ளிச் செல்லாததால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. நூற்றுக்கு மேற்பட்ட நாய்களும் அங்கே சுற்றித் திரிந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களை கடித்து வருகிறது. அதன் பின்னர் மர்ம நபர்கள் மீதி குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி அப்பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே அங்குள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில் மீண்டும் நேற்று காலை 6 மணி அளவில் குப்பை கிடங்கில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்ட வந்த நகராட்சி குப்பை லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் நகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர் அதனை தொடர்ந்து குப்பைக்கிடங்கில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.