கண்ணில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் போராட்டம்


கண்ணில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

போராட்டம்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு, கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தை சேர்ந்த கிராம மக்கள், நாம் தமிழர் கட்சி நெய்வேலி சட்டமன்ற தொகுதி செயலாளர் வீரமணி தலைமையில் வந்தனர்.

பின்னர் அவர்கள் மனுக்கள் பதிவு செய்யும் இடத்திற்கு வந்து கண்ணில் கருப்பு துணி கட்டியும், கோரிக்கை அட்டையை கையில் ஏந்தியும் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், பணிக்கன்குப்பம் மேற்கு தெருவில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 60 ஆண்டு காலமாக வசித்து வருகிறோம். ஆனால் நாங்கள் சென்று வரும் பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பல முறை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

இதனால் நோயாளிகள், பள்ளி மாணவர்கள் பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் அவர்கள் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story